Wednesday, October 8, 2008

இது உண்மையா ?




ரஜினி-கலாநிதிமாறன் திடீர் சந்திப்பு: புதிய கட்சி தொடக்கம்?


அக்டோபர் 1-ம் தேதி.... திருவிழாக் கோலம் பூண்டிருந்தது சென்னைப் புறநகர், கேளம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் பண்ணை வீடு. எங்கு பார்த்தாலும் ரசிகர்கள்! காலை ஆறு மணியிலிருந்தே சுறுசுறுப்பான இந்தப் பண்ணை வீட்டில், சுமார் 7.15 மணியளவில் "படையப்பா' ஸ்டைலில் வந்து இறங்கினார் ரஜினி.
அவரை ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயாணா வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல, கூடியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். அன்று ரசிகர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் அத்தனை பேரும் ஆஜராகி இருந்தார்கள். காலையில் வந்திருந்தவர்களுக்கு டிஃபன் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் டிஃபன், பிறகு ரஜினியுடன் ஆலோசனை என்ற ரீதியில் திட்டமிடப்பட்டிருந்தது.

ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன், படமெடுக்க ஓர் ஆங்கில டி.வி.யின் கேமராமேன் முயன்றார். அதற்குள் அங்கு வந்த சத்திய நாராயணா, "இதோ பாருங்க ஸார்..... இங்கு நின்னுக்கிட்டு படமெடுக்காதீங்க! வேணும்னா இந்தத் தெரு முனையில் போய் நில்லுங்க. வர்றவங்களுக்கிட்ட என்ன வேணும்னாலும் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க'' என்று விரட்டாத குறையாக அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து ரஜினியை அழைத்துச் செல்லும் போதே அவரிடம் ஓப்பனாகப் பேசிய சத்யநாராயணா, "நீங்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இனியும் அரசியலுக்கு வருவதையோ, இயக்கம் ஆரம்பிப்பதையோ தள்ளி வைப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை'' என்று கூறியிருக்கிறார்.

அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ரஜினி, முதலில் திருச்சி ரசிகர்களின் கருத்தைக் கேட்டார். பண்ணைக்குள் தனியாக ஒரு ஹாலில் அமர்ந்திருந்த ரஜினி, ஒவ்வொரு நிர்வாகியாகச் சந்தித்துள்ளார். ஒரே மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் என்றால் கூட, தனித்தனியாகச் சந்தித்துக் கருத்து கேட்டுள்ளார். அன்று அனைவரிடமும் ரஜினி சொன்னது இதுதான்...

"நான் அரசியல் கட்சியை இப்போது ஆரம்பிக்கப் போவதில்லை. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது ஒரு இயக்கம் ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு ஏற்ற சப்ஜெக்ட் இல்லை. முன்பு, "நதி நீர் இணைப்பு இயக்கம்' ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னேன்.

அது இப்போது டாப்பிக்கலாக இல்லை. ஆகவே நீங்களே ஒரு "கான்செப்ட்' சொல்லுங்கள். அதற்காக நான் ஓர் இயக்கம் ஆரம்பிக்கிறேன். இவ்வளவு நாளும் நான் ஆரம்பிக்கவில்லை என்று குறை கூறினீர்கள். இப்போது நான் ரெடி. நீங்கள் நமது இயக்கத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்'' என்று கேட்டாராம் சூப்பர் ஸ்டார்.

இதற்கு மூன்று மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் பெரும்பாலும், "தமிழகத்தில் குடும்ப அரசியலைப் பார்த்துதான் மக்கள் வெறுப்படைந்துப் போயிருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.தே.மு.தி.க., பா.ம.க. இப்படி அத்தனைக் கட்சிகளிலும் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. அதனால் நீங்கள் குடும்ப அரசியலை எதிர்த்து ஓர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். குடும்ப அரசியலில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்று கூறினார்களாம்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீர் பரபரப்பு! சர்ரென்று காரில் வந்து இறங்கினார் கலாநிதி மாறன். அவரை வரவேற்று அழைத்துச் சென்றார் ரஜினி. ஏறக்குறைய 45 நிமிடங்கள் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இது முடிந்த பிறகு புறப்பட்ட கலாநிதி மாறனை கார் வரை வந்து கார் கதவைத் திறந்துவிட்டு உட்காரச் சொல்லி அனுப்பி வைத்தார் ரஜினி.

கலாநிதி மாறன்

இப்படி ரஜினியும்-கலாநிதி மாறனும் சேர்ந்து வீட்டிற்குள் இருந்து வெளியே வருவதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் பெரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றார்கள். ரசிகர்களிடம் கட்சி அல்லது இயக்கம் ஆரம்பிப்பது பற்றி ஆலோசனை கேட்க கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கலாநிதிமாறன் அங்கே வந்தது, ரஜினி ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பிறகு மீண்டும் ரசிகர்களின் கருத்துக் கேட்பு படலத்தைத் தொடர்ந்தார் ரஜினி. அது முடிந்து வெளியில் வந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர், ""சூப்பர் ஸ்டார் எங்களிடம் கருத்தைக் கேட்டாலும்,ஆரம்பத்தில் மிகவும் சோர்வாகவே இருந்தார். கலாநிதி மாறன் வந்துவிட்டுச் சென்ற பிறகு மிகவும் உற்சாகமாக ஆகிவிட்டார். எங்களிடமும் படு உற்சாகமாகப் பேசினார்.

புதிய இயக்கம் ஆரம்பிப்பதற்கான கரு, கலாநிதி மாறன் மூலமாக கிடைத்திருக்கக்கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக குடும்ப அரசியலை எதிர்த்து அரசியல் இயக்கம் காண வேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளோம்'' என்றார். ரஜினி புதிய இயக்கம் ஆரம்பிப்பது உறுதியாகிவிட்டது.

இதற்கு கலாநிதி மாறன் போன்றோரின் ஆதரவும் இருக்கும் என்றே தெரிகிறது. அந்தப் புதிய இயக்கம் "குடும்ப அரசியலை' எதிர்த்துதான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். "அது ஏற்கப்படுமா? புதிய இயக்கம் ஆரம்பிக்கும் தேதி என்ன....?' இவை தான் இனி ரஜினி பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்!

எல்.ஐ.சி. பாதுகாப்புப் படை!

மூன்று மாவட்டங்களின் கருத்து கேட்பு படலத்திற்கு வந்தவர்களுக்கு எல்லாம் மதியம் பிரியாணியுடன் முழுக்க முழுக்க அசைவ உணவு தடபுடலாக ரஜினியின் பண்ணையில் பரிமாறப்பட்டுள்ளது. பண்ணை வீட்டுப் பாதுகாப்பு, ரஜினி ரசிகர்களை க்யூவில் நிற்க வைத்து அனுப்புவது போன்ற விஷயங்களை "எல்.ஐ.சி. ரஜினி ரசிகர் மன்ற'த்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பார்த்துக் கொண்டார்கள். இப்படிப் பாதுகாப்பு வீரர்களாக நின்றவர்கள் எல்லாம் மஞ்சள் கலர் பனியனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பண்ணையில் "சிவாஜி?'

"ரஜினி தரிசனத்திற்காக' வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ரசிகர்களுக்காக ஓர் அறையில் டி.வி. வைக்கப்பட்டு, அதில் முதலில் "அண்ணாமலை' படம் போடப்பட்டதாம். பிறகு "பாட்ஷா' போடப்பட்டதாம். ரசிகர்கள் "சிவாஜி' படம் போடுங்கள் என்று சத்யநாராயணாவிடம் கேட்க, ""அது பற்றிய ரைட்ஸ் இன்னும் நமக்கு ஏ.வி.எம்.மிலிருந்து கிடைக்கவில்லை. தலைவர் வீட்டிலேயே உரிமை கிடைக்காத படத்தைப் போடுவது நல்லா இருக்காது. ஸாரி'' என்று கூறிவிட்டாராம்.
தேங்க்ஸ் : அதிகாலை

No comments: