Wednesday, October 8, 2008

ஒன்னுமே புரியலே உலகத்தில !!!...


உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவா சினிமா

: மு.சிவகுருனாதான் Thanks : adikalai
(இது தாமதமான பதிவாக இருந்தாலும் தவிர்க்க இயலா பதிவு)

தமிழ் சினிமா வெளியாவதற்கு முன்பு மீடியாக்கள் உருவாக்கும் எண்ணற்ற புனைவுகள், கதைத்திருட்டு, நீதீமன்ற வழக்கு போன்றவைகள் மூலம் மக்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விளம்பர உத்தியாகவும் உலக சினிமா, தொழில்நுட்ப அசத்தல், பொருட்செலவு போன்ற இன்னபிற விளம்பரங்களுடன் வெளிவந்திருக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' (அதிக பணம் செலவழித்து எடுக்கப்படும் சினிமா சிறந்த உலக சினிமா என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது).

10 அவதாரங்கள், 2 ஆண்டுகள் தயாரிப்பு, 70 கோடி செலவு (தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் 700 கோடி செலவில் ஜாக்கிசானை வைத்து மற்றொரு உலக சினிமாவை தயாரிக்கப்போகிறாராம். தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்!) செய்து தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் 'உலகநாயகன்' என தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ளும் கமல்ஹாசன், ஷங்கர் போன்றோரின் அரைவேக்காடு அயோக்கியத்தனத்திற்கு தானும் இம்மியும் குறைந்தவனில்லை என்பதை தனது முந்தைய குருதிப்புனல், ஹேராம் போன்ற படங்கள் ஊடாகவும் இதிலும் நிரூபித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை நடந்த சில சம்பவங்களுடன், 12 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களின் ஆதாரங்களைச் சேகரித்தும், எங்கள் கற்பனைகளைக் கலந்தும் அமைக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்போடு படம் தொடங்குகிறது. உலக உருண்டை வழியே உலக சினிமா உலக நாயகனின் கண்ணுக்குள் குடிபுகுகிறது. " உலகமெங்கிலும் உன்னை வென்றிட யாரு?" என்ற பாடல் ஒலிக்கிறபோது மேடையில் ஜார்ஜ் டபிள்யு புஷ் (கமலின் ஒரு அவதாரம்; பெருமாளின் ஒரு அவதாரமும் கூட,) டான்ஸே ஆடுகிறார். "இனி ஐ. நா-வும் உன்னை அழைக்கும் என்ற பைத்தியக்காரத்தனமும் வேறு. (ஐ.நா.ஆஸ்கார் விருது அளிக்கிற அமைப்பா என்ன?).

மணல் கொள்ளையன் (பி.வாசு.). "உலகத்தை ஒத்தை ஆளாக காப்பாற்ற நீ என்ன உலகநாயகனா? " என்று கேட்கும் போது வின்சென்ட் பூவராகவன் அசடு வழிய, "ஆமாம், நான் உலக நாயகன்தான்" என்று சொல்கிறார். முதல்வர் கருணாநிதி போன்ற பட்டம் விரும்பிகள் இவருக்கு இப்படத்தை அளித்து மகிழ்கிறார்கள். அதற்குப் பதிலாக கமல், 2004 டிசம்பர் 20-ல் தொடங்கி 26-ஆம் தேதி சுனாமியுடன் முடியும் கதையில், விஞ்ஞானி கோவிந்தராமசாமிக்கு கருணாநிதி, மன்மோகன்சிங், புஷ் சகிதம் பாராட்டுவிழாவில் இடம் அளித்து சொரிந்து கொள்கிறார். ஜெயலலிதா சுனாமியைப் பார்வையிடுகிறார். 2008-ல் 'தசாவதாரம்' கேசட் விழாவில் ஜாக்கிசானுடன் கருணாநிதி பங்கேற்றார். அதற்குப் பதிலுதவியா? இல்லை 4 ஆண்டு விஞ்ஞானிக்கு சிறைத்தண்டனையா? "கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா எனபது பிரச்சனை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சனை" (சாய்பாபாவுடனான விழாவில் மு. கருணாநிதி) என்ற கருணாநிதியின் பேச்சுக்கு இணையாக படத்தின் இறுதியில் வரும் வசனம் ஒன்று. "நான் கடவுள் இல்லையின்னு எங்கங்க சொன்னேன். இருந்தா நால்லாயிருக்குன்னுதான் சொன்னேன்". (வருங்காலத்தில் பேருந்துகளில் எழுதி வைக்க பொன்மொழிகள் தயார்!).
"என் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! இந்தியர்களே!! (?!) என விளித்து கோவிந்தராஜ சுவாமிகள் சாமிக்கதை சொல்கிறார். "யேசுவும், அல்லாவும் இந்தியாக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் புகாத நூற்றாண்டு, சிவனும், விஷுனுவும் மோதி விளையாடா வேறு கடவுள்கள் இல்லாத காலம். அதனால் அவ்விரு கடவுள்களும் தம் பக்தர்கள் வாயிலாக தம்முள் மோதிக்கொண்ட நூற்றாண்டு " (12 ஆம் நூற்றாண்டு) என்ற கதை சொல்லலில் வரலாற்றுப் புரட்டும் அரசியல் சார்பும் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கு இன்னொரு ஏ. பி. நாகராஜனாக கமல்ஹாசன் அவதாரம் எடுத்து விஷ்ணுவின் திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார். சமண - பவுத்தத்தை துடைத்தெறிந்த சைவ - வைணவக் கூட்டணி, சமண - பவுத்தர்களை வேட்டையாடிக் கொன்று குவித்த வரலாற்று உண்மைகள் கவனமாக தவிர்க்க/திரிக்கபட்டுள்ளன. சைவ - வைணவ மோதல்கள் கூட உண்மையான மோதல்கள் அல்ல. அவை சிவன் (அ) பெருமாளின் திருவிளையாடல்கள். சைவ - வைணவர்களுக்குமான உண்மையான எதிரி பின்னாளில் வந்த இஸ்லாமியர்களும், கிருத்துவர்களுமே என்பதை தொடக்கத்திலேயே அடையாளம் காட்டி அந்தத் திசையில் படம் முழுக்க பயணிக்கிறது. "சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரம். உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுடையவை" என்றும் "ஓரிடத்தில் படபடக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் பிறிதோரிடத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணமாக இருக்கக்கூடும்" என்ற காயாஸ் தியரியுடன் முடுச்சுப் போட்டு 12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் போன விஷ்ணு 2004-ல் உலகை அழிக்கும் கிருமியை அழிப்பதற்காக சுனாமியாய் வந்து உலகைக் காப்பாற்றியதாக திரைக்கதை அமைத்து காதில் பூ சுற்றி இந்துத்துவ கொடுங்கோன்மைக்கு அரியணை ஏற்றியிருக்கிறார் கமல். இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் சைவர்களுடன் விஷ்ணு-வுக்காக மோதிப் போராடி கடலில் விஷ்ணுவுடன் சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுகிறான் ரங்கராஜ நம்பி. "வாய்ப்பேச்சில் வீரர்தான் வைணவர்" என்று மன்னனாலேயே பாராட்டப்பெற்று சிவமந்திரத்தை உச்சரிக்க மறுத்து வைணவ மந்திரத்தை உச்சரித்து கடலில் மூழ்கி உயிரைவிடுகிறான். "ரங்கராஜ நம்பி செத்தது சிவனும் செயலும் அல்ல. அந்த நம்பி நம்பியும் பிழைக்காமற்போனது விஷுனுவின் சூழ்ச்சியுமல்ல" என்று விளக்கமளிக்கிறார் கதை சொல்லியான விஞ்ஞானி. எல்லாம் பெருமாளின் திருவிளையாடல்! பின்பு 2004 சுனாமியாய் வெளியே வரும் வரை பல்வேறு சேஷ்டைகளில் ஈடுபடுகிறார் பெருமாள்.
ரங்கராஜ நம்பிக்கு முதல் கல்லடி ஒரு குழந்தையினுடையது. கமலுக்கு குழந்தைகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ தெரியவில்லை? குருதிப்புனலில் குழந்தைகளை அதுவும் " ஜாரே.." பாடிவரும் தேசபக்திக் குழந்தைகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்ப்பது போல காட்சி வைப்பார். " ஜாரே..." பாட்டு இங்கேயும் உண்டு. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிருமியுடன் பெருமாள் அவதாரம் வரும் விமானம் இறங்கும் பின்னணியில் ஒலிக்கிறது இப்பாடல். என்னே! தேசப்பற்று! கூடவே மதப்பற்றும். "அமெரிக்க செப்டம்பர் 11 க்கு பிறகு தன்னை பயோ ஆயுத தற்காப்புக்குத் தயார்படுத்திக் கொள்கிற மும்மரத்தில் இருந்ததாம். "பாவம் - பாருங்கள்! அமெரிக்காவுக்கு வேறு வழியேயில்லை. உலகமெங்கும் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பயோ ஆயுதம் மூலமே அமெரிக்கா தன்னை தற்காத்துக் கொள்ளமுடியும் என்று கதையளக்கிறார். புஷ்-ஆல் பாராட்டப்படும் விஞ்ஞானியொருவன் இப்படித்தான் பேசமுடியும். அமெரிக்காவின் பயோ வார் ஏதோ செப்டம்பர் 11-க்கு பிறகுதான் என்று சொல்வதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது.
தஞ்சை ராமசாமி நாயக்கர் மகன் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி பயோ டெக்னாலஜியில் பி.ஹெச்.டி படித்தவர். ('ரா' அதிகாரி பல்ராம்நாயுடு பயாலஜியில் பி.ஹெச்.டி. என்கிறார்). ரங்கராஜ நம்பியின் மனைவி கோதை, நம்பி கடலில் மூழ்கியதும் தனது தாலியைக் கழற்றி வீச அது சிலையில் தொங்குகிறது. பிற்காலத்தில் அவளே ஆண்டாளாக "முகுந்தா முகுந்தா" பாடும் போது கிருஷ்ண அவதாரத்திலிருந்து கோவிந்த் இறங்கி வருகிறார். ('இருவர்' - படத்தில் மோகன்லாலின் மனைவியாகவும், காதலியாகவும் ஐஸ்வர்யா ராய் வருவார். அதுபோல இங்கு அசின்). அப்போதே கோவிந்தராஜன் - ஆண்டாள் சேர்க்கை முடிவாகிவிட்டது. (அப்போது ஒரு டூயட் வைத்து அசினின் வருத்தத்தைப் போக்கியிருக்கலாம்) பெருமாள், விவரமின்றி செத்துப்போன ரங்கராஜ நம்பிக்கு மாற்றாக மிகவும் விவரமான சூத்திர விஞ்ஞானியால் பதிலீடு செய்யப்படுகிறார்.
"ரா" அதிகாரி பல்ராம் நாயுடுவின் (இந்திரன் - சந்திரன் கமல்) தெலுங்கு பாசத்தின் வழி தமிழ்ப்பாசம் கிண்டலடிக்கப்படுகிறது. கோவிந்த் ஆங்கிலத்தில் பேச பல்ராம் நாயுடு, "தமிழ் எப்படி வாழும்?" என்று கேட்க, உங்கள மாதிரி தெலுங்குக்காரங்க யாராவது வந்து வாழ வைப்பாங்க, விடுங்க" என்கிறார். செல்போனில் தெலுங்குப் பாடல் ரிங்க்டோன். தன் உதவியாளர் தெலுங்கு என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுதல். கூரியர் ஆபீஸில் 'நரசிம்மராவ்' என்ற பெயரைக் கேட்டவுடன் தெலுங்கா? என்று கேட்டு 'கன்னடம்' என்று தெரிந்தவுடன் 'ரெண்டு லாங்க்வேஜ்க்கும் ஒரே ஸ்கிரிப்ட் தான்' என்று சமாளிக்கும் பல்ராம் நாயுடு. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? இதுவரையும் இனியும் தமிழை வாழவைக்கப் போகிறவர்கள் பிறர்தான் என்றா?
Thanks : adikalai

4 comments:

King Viswa said...

// "நான் கடவுள் இல்லையின்னு எங்கங்க சொன்னேன். இருந்தா நால்லாயிருக்குன்னுதான் சொன்னேன்". (வருங்காலத்தில் பேருந்துகளில் எழுதி வைக்க பொன்மொழிகள் தயார்!)//

மிக மிக அற்புதம். ஐ லைக்ட் இட்.

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

Vignesh said...


I would highly appreciate if you guide me through this.
Thanks for the article…
spoken english material
Learning Books for spoken english
Learning Spoken english materials
Learning Spoken english from home
Home study English
English home study pack
English training books
Spoken English Study Pack
Spoken English training pack
Spoken English self study

Vignesh said...

I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Bharatanatyam Dancer
Bharatanatyam exponent
Bharatanatyam USA
Bharatanatyam Reviews
Bharatnatyam classes in New Jersey
Dance Schools for Bharatanatyam
Bharatanatyam teachers
Best Bharatanatyam Dancers
Natya shastra scholar
Bharatnatyam classes
Bharatanatyam Karanas
Bharatanatyam Dance Workshop
Dancer Workshop
Workshop for Bharatanatyam Dance